ADDED : மார் 19, 2024 06:21 AM
கோவை : கோவையில் நேற்று மாலை நடைபெற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதற்காக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் போலீஸ் அவசர எண், 100க்கு ஓர் அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறி, அழைப்பை துண்டித்து உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. போலீசார் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும், மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை அழைத்து செல்ல முயன்றனர்.
அவர்களிடம் பள்ளி நிர்வாகம், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று விளக்கம் அளித்தது. அதன் பின், அவர்கள் கலைந்தனர்.

