ADDED : ஜன 06, 2025 12:09 AM
சென்னை: சென்னை எழும்பூரில், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தமிழகத்தில், எந்த இடத்தில் இருந்தும், அவசர போலீஸ் உதவி எண், 100ஐ தொடர்பு கொண்டால், இந்த மையத்திற்கு இணைப்பு கிடைக்கும்.
இங்கிருந்தபடியே, பிரச்னைக்குரிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள போலீசார் அனுப்பி வைக்கப்படுவர். அதற்கான பணியில், போலீசார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, 'இன்னும் சற்று நேரத்தில், தலைமை செயலகம் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. முடிந்தால் தடுங்கள்' என்று கூறிவிட்டு, தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்த தகவல் உடனடியாக, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் உத்தரவுப்படி, மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தலைமை செயலகம் மற்றும் டி.ஜி.பி., அலுவலகம் சென்று சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. மிரட்டல் விடுத்தவர் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்று சட்டசபை கூட உள்ள நிலையில், தலைமை செயலகம் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால், இரு இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

