புதிய நுாலகங்களுக்கு புத்தக கொள்முதல் ஆணை ரத்து: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
புதிய நுாலகங்களுக்கு புத்தக கொள்முதல் ஆணை ரத்து: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:44 PM
சென்னை: ‘‘தமிழகம் முழுதும் புதிய நுாலகங்களுக்கு, புத்தகம் கொள்முதல் செய்வதற்காக, கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆணைகள், ரத்து செய்யப்பட்டுள்ளன,’’ என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை கன்னிமாரா நுாலகத்தில், அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அளித்த பேட்டி:
நுாலகங்களுக்கான புத்தகம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம், சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ‘ஜீன் டிரெஸ்’ என்பவர், ‘நான் எழுதாத ஒரு புத்தகத்தை, என் பெயரில், 2023ம் ஆண்டு மதுரை கலைஞர் நுாலகத்துக்கு, வாங்கி உள்ளனர்’ என, தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
போலி நுால்கள் விவகாரம், கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துள்ளன. அதேபோல், எழும்பூர் கன்னிமாரா நுாலகத்திலும், போலியான பெயரில், ஏ.ஐ., எனும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நிவேதா பால்ராஜ், நிவேதா அன்பழகன் எனும் போலி பெயரில், சட்டம், பொருளாதாரம், பாலின சமத்துவம், முதியோர் நலன் ஆகிய புத்தகங்கள் உள்ளன.
அதேபோல், கிரிக்கெட் வீரர் சச்சின் பெயரிலும் புத்தகங்கள் உள்ளன. நடிகர், நடிகையர் பெயரிலும், பவித்ரா கருணாநிதி, கமலாம்மாள் கருணாநிதி பெயரிலும் புத்தகங்கள் உள்ளன. இவை எல்லாம், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட, சீலிடப்பட்ட புத்தகங்களாகும்.
இவற்றை எல்லாம், ஸ்காட்லாந்து போலீசால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என, தி.மு.க., நினைக்கவில்லை. மாற்றம் ஏற்பட்ட தால், மாட்டிக் கொண்டனர்.
கன்னிமாரா நுாலகத்திற்கு, கடந்த ஆண்டு மட்டும், 523 புத்தகங்கள், அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போலி புத்தகங்களில், ஆசிரியர் குறிப்பு என்ற பகுதியே இல்லை.
புத்தக திருவிழாக்களை நடத்தும், ‘பபாசி’ போன்ற அமைப்பினர், அகல் விளக்கு பதிப்பகம் என்றால் தெரியாது என்கின்றனர்.
ஒரு பெரிய சிண்டிகேட் அமைத்து, காலங்காலமாக ஏமாற்றி வந்துள்ளனர். அகல் விளக்கு பதிப்பகத்தின், போலி புத்தகங்கள் அனைத்தும், ஒரு பெட்டில் வைக்கப்பட்டு, அதை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளோம்.
திருச்சி காமராஜர் நுாலகம் உள்ளிட்ட புதிய நுாலகங்களுக்கான, புத்தகம் கொள்முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் நுாலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன.
விசாரணை
பழைய உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நுாலக விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் விசாரணை யை தொடங்கி உள்ளது.
அகல்விளக்கு பதிப்பாளர் உரிமையாளரை விசாரிக்க, நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. புத்தகம் கொள்முதல் தொடர்பாக, புதிய கொள்கையை வெளியிட, ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
