10,000 பேரில் ஒருவருக்கு குடல் புற்று நோய் மூன்றில் இருவர் உயிரிழக்கும் அபாயம்
10,000 பேரில் ஒருவருக்கு குடல் புற்று நோய் மூன்றில் இருவர் உயிரிழக்கும் அபாயம்
ADDED : மார் 23, 2025 01:32 AM

தமிழ்நாடு குடல் இரைப்பை நிபுணர்கள் அறக்கட்டளை சார்பில், 'கோலான் கேன்சர்' என்ற குடல் புற்று நோய் குறித்து இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று துவங்கியது.
இதில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். உலகளவில் குடல் புற்று நோய் பாதிப்பு, மருத்துவ சிகிச்சை, தடுக்கும் முறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இது குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் குடல் இரைப்பை சிகிச்சை நிபுணரும், அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் கே.ஆர்.பழனிசாமி கூறியதாவது:
வளர்ந்த நாடுகளை காட்டிலும், நம் நாட்டில் குடல் பாதிப்பு குறைவு. மாறி வரும் வாழ்வியல் காரணமாக, நம் நாட்டிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு முன், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்த குடல் பாதிப்பு, 40 வயதிலிருந்தே தாக்குகிறது.
குடல் புற்று நோய், 10,000 பேரில் ஒருவரை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. நோய் கண்டறியப்பட்ட பின், மூன்றில் இரண்டு பேர், அதே ஆண்டிலேயே உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு, முற்றிய நிலையில் தாமதமாக நோய் கண்டறியப்படுவதே காரணம்.
பெருங்குடல் உள்பக்கம், 'பாலிப்' என்ற சிறு மரு போல் தோன்றி மெல்ல வளரும். இது, எவ்வித அறிகுறியையும் நமக்கு காட்டாது. இதை கண்டறிய, பெருங்குடல் உள்ளே பார்க்கும் பரிசோதனையான, 'கோலனாஸ்கோப்பி' சிகிச்சையை டாக்டர்கள் செய்கின்றனர்.
குடும்பத்தில் யாருக்காவது குடல் புற்று நோய் பாதித்திருந்தால், மார்பகம், தைராய்டு, கர்ப்பப்பை புற்று நோய் பாதித்திருந்தால், கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்று, ஆண்டுக்கணக்கில் மருந்து உட்கொண்டவர்களாக இருந்தால், குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் கோலனாஸ்கோப்பி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இது வராமல் தடுக்க, உடல் பருமன் அதிகரிக்காமல் உடற்பயிற்சி, புகையிலை, மது தவிர்ப்பு, மாமிச உணவு குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்தல் அவசியம். அதே நேரம், அதிக பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
மேலும், அடிக்கடி பேதியாய் மலம் கழிப்பது, மலத்தின் வடிவம் மெலிதாய், கடினமாய் மாறி வருவது, மலத்தில் ரத்தம் கலந்து வருவது, அவசரமாய் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, கழிப்பறை சேரும் முன் காலோடு மலம் வழிவது, உடல் சோர்வு, எடை குறைவு, வயிறு வலி, துாக்கம் கலைந்து இரவில் எழுந்து மலம் கழிப்பது உள்ளிட்டவை, குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால், குடல் இரைப்பை நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.