பூணுால் அறுத்தோர் மீது நடவடிக்கை கவர்னரிடம் பிராமணர் சங்கம் மனு
பூணுால் அறுத்தோர் மீது நடவடிக்கை கவர்னரிடம் பிராமணர் சங்கம் மனு
ADDED : செப் 26, 2024 02:31 AM

சென்னை:கவர்னர் ரவியை சந்தித்து, 'பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசுதல், பூணுால் அறுப்பு போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பிராமணர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
தமிழக பிராமணர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில், சங்க மாநில பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர் ஸ்ரீமதிலலிதா உள்ளிட்டோர், கவர்னர் ரவியை நேற்று ராஜ் பவனில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை தியாகராஜ நகரில், அகிலேஷ் என்பவரின் பூணுாலை, அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துள்ளனர். கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிராமண சமூகத்தை பல்வேறு காலகட்டங்களில், தொடர்ந்து அவமரியாதையாகவும், இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், பிராமண சமூகத்தை அழிக்கவும், அதன் வாயிலாக ஹிந்து மதத்தை முழுதும் ஒடுக்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
பிராமண துவேஷ பேச்சு தொடர்பாக, பல முறை புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது போன்ற செயல்கள் இனி நடக்காத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கவர்னர் ரவி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.