ADDED : ஆக 15, 2025 12:57 AM

திருநெல்வேலி:தமிழக தேசிய நல குழு இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக., 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.
மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய மாத்திரைகளை தராமல் வைத்திருந்து அதை குழி தோண்டி புதைத்துள்ளனர். காலாவதியாகாத மாத்திரை களை குழி தோண்டி புதைத்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டாக்டர் அருண் தம்புராஜ் , அங்கு நேரில் ஆய்வு செய்தார். மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நாங்குநேரி, திருக்குறுங்குடி, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் குறித்து சக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் உள்ள மருத்துவமனைகளின் டாக்டர்களை கடிந்து கொண்டார். அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடத்தியுள்ள நாங்குநேரி உள்ளிட்ட மருத்துவமனை டாக்டர்களை பாராட்டினார்.
பின்னர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வேல்முருகன் கணேஷ், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.