ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது: பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது: பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
ADDED : செப் 30, 2025 08:13 AM

காரியாபட்டி: ''ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. பண்டிகை, திருவிழா, சுகம், துக்கம் என நமது கலாசாரத்தில் பட்டாசு உள்ளது,'' என சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் பட்டாசு தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின் அவர் அளித்த பேட்டி:
நாட்டின் மொத்த தேவையில் 95 சதவீதம் பட்டாசு சிவகாசியில் உற்பத்தி செய்யபடுகிறது. விபத்து இல்லாத பட்டாசு தொழிலை உருவாக்க வேண்டும். ஆளும் கட்சியாக எந்த கட்சி இருந்தாலும் பட்டாசு தொழிலை கண்டு கொள்வதில்லை. தேர்தல் நேரத்தில் பண மூட்டை உடன் வந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். டாஸ்மாக் மட்டுமின்றி போதை மாத்திரைகளும் பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்சியாளர்கள் தான் இதை செய்கின்றனர். என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரு வாரத்தில் போதையை ஒழிப்பேன். உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக பட்டாசு தொழிலுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. பட்டாசு வழக்கில்
வந்துள்ளது தவறான தீர்ப்பு. பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரச்னை இருப்பது போல், முதலாளிகளுக்கும் பிரச்னை உள்ளது. விதிகளை பின்பற்றி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு பட்டாசு பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பொருளார் திலகபாமா உடனிருந்தார்.
முன்னதாக காரியாபட்டியில் காவிரி -குண்டாறு நதியை இணைப்போம், விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு பிரசாரத்தை பா.ம.க., தலைவர் அன்புமணி துவக்கி வைத்து, பேசியதாவது,
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு திட்டத்தால் 80 லட்சம் மக்கள் பயன்பெறுவர். திமுக அரசுக்கு கவலை இல்லை. 2008ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த அன்பழகன் இத்திட்டத்தை அறிவித்தார். அ.தி.மு.க., ஆட்சி ரூ.14 ஆயிரத்து 500 கோடி அறிவித்தது. தொடர்ந்து வந்த தி.மு.க., ஆட்சி ரூ. 364 கோடி ஒதுக்கியது. கரூரிலிருந்து குண்டாறு வரை 265 கி. மீ., துாரம். ஆனால் வெறும் 8 கி.மீ., தான் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வேகத்தில் சென்றால் இன்னும் 255 ஆண்டுகள் ஆகும்.
காரைக்கால் மீனவர்களை இலங்கை கைது செய்தது தவறான போக்கு. அது போன்ற நேரங்களில் ஒரு கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு முதல்வர் கண்டு கொள்வதில்லை. எம்.பி.,கள் என்ன செய்கிறார்கள். போராட்டம் நடத்த வேண்டியதானே, என்றார்.