ஓலைச்சுவடி நகல் எடுக்கும் பணி வல்லுநர்களுக்கு அழைப்பு
ஓலைச்சுவடி நகல் எடுக்கும் பணி வல்லுநர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 13, 2025 12:26 AM
சென்னை:மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில், ஓலைச்சுவடிகளை நகல் எடுக்கும் வல்லுநர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழர்களின் பொக்கிஷங்களில் ஒன்றாக, சித்தர்கள் எழுதி வைத்த மருத்துவ ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி, பாரம்பரிய சித்த வைத்தியம் பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும், அதை கைவிட்ட பல வைத்தியர் குடும்பங்களில், பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை நகல் எடுத்து, பதிப்பிக்கும் பணியும் துவங்கி உள்ளது.
அதனால், தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை நகல் எடுப்பதில், ஆர்வமும், அனுபவமும் உள்ள வல்லுநர்கள், 'தலைமை இயக்குநர், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், ஜி.எஸ்.டி.சாலை, சானடோரியம், சென்னை - 47' என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது, ccrschennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

