வெளிநாட்டில் இருப்பவர்கள் ஓட்டளிக்கலாம் பிற மாநிலத்தவர்கள் கூடாதா? பா.ஜ., கேள்வி
வெளிநாட்டில் இருப்பவர்கள் ஓட்டளிக்கலாம் பிற மாநிலத்தவர்கள் கூடாதா? பா.ஜ., கேள்வி
ADDED : ஆக 05, 2025 02:51 AM
சென்னை: ''வேறு நாட்டில் இருந்தெல்லாம் இந்தியாவுக்கு வந்து ஓட்டளிக்கலாம்; வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள் ஓட்டளிக்கக் கூடாதா,'' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை பார்த்து, சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதனால், எரிச்சலில் அடிமை கூட்டணி என்றெல்லாம் சிலர் பேசுகின்றனர். அது குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
'ஸ்டெர்லைட்' ஆலையை திட்டமிட்டு மூட வைத்ததால், பலரும் வேலை இழந்தனர். அவர்களெல்லாம் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அப்படி வேலை இழந்தவர்களுக்கு, துாத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'வின் பாஸ்ட்' மின்சார கார் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பீஹாரைச் சேர்ந்த வாக்காளர்கள் 6.5 லட்சம் பேர், தமிழகத்தில் ஓட்டளிக்கப் போவதாக பொய்யான செய்தியை, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் கூறியுள்ளார். வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் இந்த நாட்டில் ஓட்டளிக்கலாம்; வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள் ஓட்டளிக்கக் கூடாதா? பிரியங்கா வெளிநாட்டில் இருந்து கொண்டு, இங்கு தேர்தலில் போட்டியிடும்போது, மற்ற மாநிலத்தவர்கள் ஓட்டளிக்கக்கூடாதா?
தமிழகத்தில் 'ஹிந்து சமய அறநிலைய துறை, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படுகிறது. கோவில்களில் எந்த பணியையும் முழுமையாக, முறையாக நிறைவு செய்யாமல், அவசர கதியில் குடமுழுக்கு நடத்துகின்றனர்' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கெல்லாம் அமைச்சரும், முதல்வரும் என்ன சொல்லப் போகின்றனர்?
இவ்வாறு அவர் கூறினார்.