மகளை இழந்து வாடும் அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா: முதல்வருக்கு நயினார் கேள்வி
மகளை இழந்து வாடும் அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா: முதல்வருக்கு நயினார் கேள்வி
ADDED : ஜூலை 23, 2025 10:20 PM

சென்னை: தர்மபுரி அருகே 3 வயது சிறுமியை இழந்து வாடும் அன்னையின் இழப்பை ஈடுகட்ட முடியுமா என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தர்மபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பஸ் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை இழந்து வாடும் தாயாருக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை வந்தால் ஒழுகுவதும், காற்றடித்தால் உடைந்து பறப்பதும், வேகத்தடை மீது ஏறி இறங்கினால் படிக்கட்டுகள் கழன்று விழுவதும் தான் திமுக ஆட்சியில் அரசு பஸ்களின் அவல நிலை என்பதையும், இத்தகைய பஸ்கள் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தானவை என்பதையும் நாம் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். இப்படிப்பட்ட ஓட்டை உடைசல் பஸ்களை டிரைவர்களால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஆளும் அரசு மக்கள் பாதுகாப்பைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இன்று ஒரு பிஞ்சு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் தனது மகளைப் பறிகொடுத்து வாடும் அந்த அன்னையின் இழப்பை ஈடு கட்ட முடியுமா?
எனவே, இந்தக் கோர விபத்திற்கு திறனற்ற திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டிரைவரின் மீது பழியைப் போட்டு மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.