அரசு மருத்துவமனைகளில், கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களை எடுத்துச் சென்று, சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் சேவை பணியில், சில தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
எல்லாராலும் அனாதை பிணங்களை, அரசு மருத்துவமனையில் இருந்து வாங்கி விட முடியாது. அதற்கு அரசிடம் முறைப்படி விண்ணப்பம் செய்து, உரிமம் பெற வேண்டும். அப்படி உரிமம் பெற்று, சென்னையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள், இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, இந்நிறுவனங்கள் சொந்தமாக அமரர் ஊர்திகள் வைத்துள்ளன.
இவற்றில், சென்னையில் மூன்று ஆண்டுகளாக, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மட்டும், அரசு மருத்துவமனைகளில் இருந்து அனாதை பிணங்கள் தரப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட நிறுவனத்தினருக்கும், அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தான் அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து, அந்த குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தினர், தங்கள் அமரர் ஊர்திகளில், நெல்லை, துாத்துக்குடி என, வெளி மாவட்டங்களுக்கு அனாதை பிணங்களை எடுத்துச் செல்கின்றனர்.
அந்த ஊரை நெருங்கிய பின், ஓட்டுனரை ஓய்வெடுக்க அனுப்பி விடுவர். பின், சென்னை திரும்பும் வரை, அந்த வாகனத்தை தொண்டு நிறுவன உரிமையாளருக்கு நெருக்கமானவர்கள் தான் ஓட்டுவர். சென்னை திரும்பிய பின், ஓட்டுனருக்கு 10,000 ரூபாய் வரை பணம் தரப்படுவதும் உண்டு. எதற்காக இவ்வளவு பணம், இடையில் என்ன நடந்தது என்பதெல்லாம், அந்த ஓட்டுனருக்கு தெரிவதில்லை.
இதன் பின்னணி குறித்து, விபரம் அறிந்தவர்கள் கூறியதாவது:
அனாதை பிணங்களை ஏற்றிச் செல்லும் அமரர் ஊர்திகளை, போலீசார் சோதனை செய்ய மாட்டார்கள். இதை, அந்த சம்பந்தப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
அனாதை பிணங்களை எடுத்துச் செல்லும் செயலில், அந்த தொண்டு நிறுவனம் தான் மூன்று ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அனாதை பிணங்களை ஏற்றிச் செல்வது போல, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
இதன் பின்னணியில், யார் யார் உள்ளனர் என்பதை போலீசார் விசாரித்தால், உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் -

