கார் சாகுபடி நெல் உற்பத்தி நெல்லையில் 3 மடங்கு உயர்வு
கார் சாகுபடி நெல் உற்பத்தி நெல்லையில் 3 மடங்கு உயர்வு
ADDED : நவ 16, 2025 02:02 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஜூன் - ஆகஸ்ட் இடையே நடக்கும் நெல் சாகுபடி, கார் பருவம் என்றும், அக்., - டிச., இடையிலான சாகுபடி பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மாவட்டங்களில், செப்., 10 முதல் அரசு நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட துவங்கியுள்ளன. முந்தைய ஆண்டில், 8,000 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இந்தாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், 37 மையங்களில், 28,500 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னமும், 1,500 டன் வரை கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ஞானசபாபதி கூறுகையில், ''இந்தாண்டு கார் பருவம் சிறப்பாக இருந்தது. மழை போதிய அளவில் பெய்ததும், விவசாயிகள் நெல்லில் அதிக ஆர்வம் காட்டியதும் இந்தாண்டு உற்பத்தி உயர்வுக்கு முக்கிய காரணம்.
''தமிழகம் முழுதும் இந்தாண்டு, 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகம்,'' என்றார்.
தென்காசி மாவட்ட முதுநிலை மேலாளர் வெங்கடலட்சுமி கூறுகையில், ''தென்காசியில் இந்தாண்டு, 13,700 டன் நெல் கொள்முதல் செய்துள்ளோ ம். மேலும் ஆயிரம் டன் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட இருமடங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. மழையால் எந்த சேதமும் இல்லை,'' என்றார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே வடகரையில் தொடர் மழையால் அறுவடை செய்த நெல் காயாமல் உள்ளது. அவற்றை ரோடுகளில் விவசாயிகள் காயவைத்து வருகின்றனர்.

