பிரசாரத்தில் ஆரத்தி எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து
பிரசாரத்தில் ஆரத்தி எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து
ADDED : மே 07, 2025 03:38 AM
சென்னை:தேர்தல் பிரசாரத்தின் போது, ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, வேடசந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு, 2021ல் பொது தேர்தல் நடந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் காந்திராஜன் போட்டியிட்டார். 2021 ஏப்., மாதம், தொட்டனம்பட்டி ரயில்வே சந்திப்பு அருகே வாக்காளர்கள், காந்திராஜனுக்கு ஆரத்தி எடுத்ததாகவும், அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும், தனியார் தொலைகாட்சியில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக இருந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைச்சாமி, எரியோடு போலீசில் புகார் அளித்தார். காந்திராஜன் உட்பட, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறாமல், காவல் துறை வழக்கை இயந்திரதனமாக பதிவு செய்துள்ளது.
அதனால், மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என, உத்தரவிட்டுள்ளார்.

