ADDED : மார் 04, 2024 06:28 AM
நாகர்கோவில்: மனைவியிடம் புல்லட் வாங்கி கேட்ட கணவர் உட்பட 5 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் காட்டா துறையைச் சேர்ந்தவர் பிரவீன் சூர்யா 28. மனைவி ஸ்டெர்லின் 22. இவர்களுக்கு 2022 ஏப். 22 -ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஸ்டெர்லின், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார்:
மணமான முதல் நாளே கணவர் பிரவீன் சூர்யா 'உன் வீட்டில் சொல்லி எனக்கு புல்லட் பைக் வாங்கி தர வேண்டும் 'என்று கூறினார். இது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. எனினும் நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். இதையடுத்து தினமும் எதையாவது ஒரு பொருளை சொல்லி அதை உன் வீட்டில் சென்று வாங்கி வா என்று கூறிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் எனது பெற்றோரின் வீட்டை என் பெயருக்கு உடனடியாக மாற்றிவிடு என்று கட்டாயப்படுத்தினார். இதற்காக எனது மாமனார் ராஜ செல்வன் 58, மாமியார் கனகராணி 52, ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தினர். இதற்கு என் கணவரின் தம்பி விபின் சூர்யா 20, அவரது மனைவி ஜெனி 19, உடந்தையாக இருந்தனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரவீன்சூர்யா, ராஜசெல்வன், கனகராணி, விபின் சூரியா, ஜெனி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

