ஹிந்து பெண்களை அவமதித்ததாக திருமா மீது தொடர்ந்த வழக்கு ரத்து
ஹிந்து பெண்களை அவமதித்ததாக திருமா மீது தொடர்ந்த வழக்கு ரத்து
ADDED : ஜன 03, 2025 12:51 AM

சென்னை: ஹிந்து பெண்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பதிவான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 2020 செப்டம்பர், 27ல் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில், பங்கேற்ற திருமாவளவன், ஹிந்து பெண்களுக்கு அவமதிப்பு, வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, மதுரையை சேர்ந்த வேதா என்ற தாமோதரன், பேரையூர் நீதிமன்றத்தில், தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார்.
இப்புகாரின் அடிப்படையில், பேரையூர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
'மனு ஸ்மிருதி' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட உள்ளடக்கங்களை தான், மனுதாரர் பேசியுள்ளார் என்பதை, அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண மனுவை பார்க்கும் போது அனுமானிக்க முடிகிறது.
புத்தகத்தில் உள்ளதை தான் பொதுவாக பேசியுள்ளார். புகார்தாரர் தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
வெறுப்புணர்வை ஏற்படுத்த எந்த நோக்கமும் இல்லை; யாரையும் பாதிக்கவில்லை; அவரது பேச்சில் இடம்பெற்ற வார்த்தைகள் பொதுவானது என்பதால், மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.