ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஆக 26, 2025 04:34 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரசார பயணம் மேற்கொண்டார்.
அவர் வருவதற்கு முன், துறையூர் பஸ் நிலையம் பகுதியில், திரண்டிருந்த கூட்டத்துக்குள், ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. பழனிசாமி பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆம்புலன்ஸ்களை திட்டமிட்டே அனுப்புவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆம்புலன்சை பார்த்ததும், அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் ஆவேசம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் கதவை திறந்து, கண்ணாடியை அடித்து, ஆம்புலன்சை ஒட்டி வந்த டிரைவர் செந்தில், 37, பெண் மருத்துவ பணியாளர் ஹேமலதா, 25, ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, செந்தில், ஹேமலதா ஆகிய இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்ததோடு, போலீசிலும் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், அ.தி.மு.க., நகர செயலர் பாலு, ஒன்றிய செயலர் காமராஜ், நகர இளைஞரணி செயலர் விவேக், கவுன்சிலர் தீனதயாளன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என, 14 பேர் மீது, பெண் வன்கொடுமை உட்பட, 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இன்று போராட்டம்
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலர் இருளாண்டி கூறுகையில், ''ஆம்புலன்ஸ் ஊழியர்களை, திருச்சி துறையூரில் அ.தி.மு.க.,வினர் தாக்கி உள்ளனர். எங்களுக்கு எதிராக பேசி, பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு புகார் அளித்துள்ளோம். அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து தவறாக நடப்பதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மதியம் 12:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்; நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.

