ADDED : ஜூன் 11, 2025 02:29 AM
மதுரை : மதுரையில் அரசு பஸ்சை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், டிரைவர் கணேசனை செருப்பால் அடித்ததால் 'சஸ்பெண்ட்' ஆன அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை கோவை தாராபுரத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையம் வந்த அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டி வந்தார். பஸ்ஸடாண்டுக்கு முன்பாகவே பயணிகள் ஏறியதால் அதுபற்றி நிலைய அதிகாரிகளிடம் டிரைவர், கண்டக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 2 பஸ்களில் கூட்டம் இருந்ததால், தாராபுரம் பஸ்சை உடனே எடுக்க அனுமதிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக எழுந்த பிரச்னையில் டிரைவர் கணேசனை, உதவி மேலாளர் மாரிமுத்து செருப்பால் அடித்தார். இப்பிரச்னையில் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி மேலாளரை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் இளங்கோவன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மாரிமுத்து மீது கரிமேடு போலீசில் பாதிக்கப்பட்ட டிரைவர் கணேசன் புகார் செய்தார். மிரட்டுதல், அடித்தல், செருப்பால் தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.