ADDED : ஜூலை 13, 2025 01:00 AM

கோவை:கோவையில், எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்த தி.மு.க., நிர்வாகி உட்பட, ஏழு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
கோவை, கோட்டைமேடு பகுதியில் இருந்து, தி.மு.க., பகுதி செயலர் பக்ருதீன், வார்டு செயலர் அப்பாஸ் உள்ளிட்ட தி.மு.க.,வினர், சங்கமேஸ்வரர் கோவில் வழியாக மணிக்கூண்டுக்கு, ஒரு வழிப்பாதையில் வந்தனர்.
உக்கடம் எஸ்.ஐ., அஜய் சர்மா, ஒருவழிப்பாதையில் வந்த வாகனங்களை நிறுத்தி, 'போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்தார். அவருடன் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., நிர்வாகி கோட்டை அப்பாஸ், 'தொலைச்சுப்புடுவேன்... உன் சட்டையை கழற்றிடுவேன்' என, மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அஜய் சர்மா புகாரில், உக்கடம் போலீசார், கோட்டை அப்பாஸ், தி.மு.க., பகுதி செயலர் பக்ருதீன், வட்ட செயலர் அப்பாஸ், இளைஞர் அணி செயலர் மசூது உட்பட ஏழு பேர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.