ADDED : ஆக 06, 2025 08:47 AM
சென்னை : தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்தது விந்தையாகும். கடந்த கால ஆட்சியில், 'அம்மா உப்பு' என்ற திட்டத்தில், எத்தனை இடங்களில் உப்பு விற்றனர் என்ற விபரம் தெரியவில்லை.
'அம்மா உப்பு' என பெயர் வைத்து, 10 கடைகளில் தான் உப்பு விற்கப்பட்டது. 'அம்மா குடிநீர்' என துவங்கி, பஸ் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்தனர். சாலையோர பூங்காவுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் செலவிட்டு, அதற்கும், 'அம்மா பூங்கா' என பெயர் வைத்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தால், தி.மு.க.,விற்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அந்த காழ்ப்புணர்ச்சியால், அந்த திட்டத்துக்கு எதிராக அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.