UPDATED : நவ 21, 2026 06:28 PM
ADDED : நவ 21, 2026 06:28 PM
சென்னை: சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத உள்ளாட்சி பிரதிநிதிகளை, தகுதியிழப்பு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘பத்து ரூபாய்’ என்ற இயக்கத்தின் மாநிலச் செயலர் பாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின் 34வது பிரிவின்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தலைவர் முதல் உறுப்பினர் வரையிலான அனைத்து பிரதிநிதிகளும், தங்களின் சொத்து விபரங்களை, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலானோர் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாக ஆணையரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, குறிப்பிட்ட காலவரையறைக்குள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து, கடன் விபரங்களை, நகராட்சி நிர்வாகத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
சொத்து விபரங்கள் தாக்கல் செய்யாதவர்களை, தகுதியிழப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
