திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்கு
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்கு
ADDED : நவ 28, 2025 11:36 PM

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க தாக்கலான வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலை யில் டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சியிலுள்ள, பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. தர்காவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் உள்ளது.
சட்டவிரோதம்
பதிலாக, மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்டவிரோதம். தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கநாதன் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். மதுரை கனகவேல் பாண்டியன், 'பாரம்பரிய வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அறநிலையத்துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 'பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கில், ஆதாரம் இல்லாமல் ராமரவிக்குமார் மனு செய்துள்ளார்' என, வாதிட்டார்.
வக்புவாரிய தரப்பு வழக்கறிஞர் அப்துல் முபின், 'சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். ராம ரவிக்குமாரின் மனு நிலைக்கத்தக்கதல்ல. ஆதாரத்தை அவர் தாக்கல் செய்யவில்லை. கோவில் நிர்வாகத்திற்கு வக்பு வாரியம் ஒத்துழைப்பு அளிக்க தயார். ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால் தான் தீர்வு கிடைக்கும்' என, வாதிட்டார்.
கல்வெட்டு ஆதாரம்
அரங்கநாதன் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'கோவில் கருவறைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என கோவிலின் மூத்த ராஜபட்டர் தெரிவித்துள்ளார். அவர் அதில் நிபுணத்துவம் பெற்றவர். இவ்விவகாரத்தில் ராம ரவிக்குமார் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது' என்றார்.
நீதிபதி, 'பழமையான தீபத்துாணை மூடி மறைத்து வைத்தது யார்?' என, கேள்வி எழுப்பினார். இதற்கு, அரசு தரப்பில், 'கோவில் நிர்வாகம்' என, பதில் அளிக்கப்பட்டது.
நீதிபதி, 'அத்தீபத்துாண், தர்கா இடையிலான துாரம் எவ்வளவு?' என, கேட்க, சோலை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார், 'தர்கா எல்லை சுற்றுச்சுவரிலிருந்து தீபத்துாண் 63.20 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது' என, பதிலளித்தார். வாதத்தை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

