ADDED : செப் 22, 2024 02:42 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், கேரளாவைச் சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கோவை சரவணம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக 2023 ஏப்ரல் முதல் கடந்த ஜூன் வரை, வேலுார் மத்திய சிறையில் இருந்தேன்.
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி, தனிமை சிறையில் அடைக்கின்றனர்; அவர்களை அடித்து சித்ரவதை செய்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்டால் இருட்டறையில் அடைத்து துன்புறுத்துகின்றனர்.
சிறைத்துறையினரின் துன்புறுத்தலால் கைதிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியில் தெரியாமல் அதிகாரிகள் மறைக்கின்றனர். கைதிகளை துன்புறுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறைகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மனித உரிமை ஆணையம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் முதல் அமர்வு உத்தரவிட்டது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.