'இரிடியம்' விற்பதாக பல கோடி ரூபாய் மோசடி 70 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை
'இரிடியம்' விற்பதாக பல கோடி ரூபாய் மோசடி 70 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை
ADDED : செப் 13, 2025 12:45 AM

சென்னை:'இரிடியம்' விற்பதாக கூறி நடக்கும் மோசடி தொடர்பாக, மாநிலம் முழுதும் 40 இடங்களில் சோதனை நடத்திய சி.பி.சி.ஐ.டி., போலீசார், 70 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுதும் மர்ம கும்பல், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களை குறிவைத்து, அரிதான பொருளான, இரிடியம் வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இக்கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போரின் வங்கி கணக்கில், சந்தேகத்திற்குரிய முறையில், பல கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள், சென்னை எழும்பூரில் செயல்படும், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், தனிப்படை அமைத்து, சந்தேக நபர்களின் வங்கி கணக்கு விபரங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, பல கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று, மோசடி நடந்திருப்பதை கண்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று தமிழகம் முழுதும், போலீசார் பல்வேறு குழுக்களாக சென்று, 40 இடங்களில் சோதனை நடத்தி, 70க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயராஜ். தொழில் அதிபரான இவர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழில் செய்து வருகிறார்.
இவர் இரிடியத்தில் முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவரது சொகுசு பங்களாவில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். அம்பத்துாரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவரது வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அவர் வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க., பிரமுகரான மூர்த்தி வீட்டில் நடத்திய சோதனையில், 3.19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'இரிடியம் முதலீடு மோசடி தொடர்பாக, பெரிய அளவில் 'நெட் ஒர்க்' செயல்பட்டு வருகிறது.
'அரிதான பொருளான இரிடியத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தருவதாகக் கூறி மோசடி நடந்துள்ளது.
'இது தொடர்பாக மாநிலம் முழுதும் சோதனை நடத்தி, 70க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.