சி.பி.ஐ., விசாரணையை மாற்றக்கூடாது: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி மனு
சி.பி.ஐ., விசாரணையை மாற்றக்கூடாது: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி மனு
ADDED : அக் 30, 2025 01:19 AM
'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்' என, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தமிழக போலீசார் விசாரித்து, 27 பேரை கைது செய்தனர்.
ஆனால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என, கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான அஸ்வத்தாமன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்துள்ளார்.
கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பிறகு உடல் நல பாதிப்பால் மரணம் அடைந்த நாகேந்திரன் என்பவரின் மகன் தான் இந்த அஸ்வத்தாமன்.
'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., தான் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தமிழக போலீஸ் விசாரணைக்கு மாற்றக் கூடாது' என, மனுவில் அஸ்வத்தாமன் கோரிக்கை வைத்து உள்ளார்.
சில தினங்களுக்கு முன், இதே கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டில்லி சிறப்பு நிருபர் -

