சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் 2வது நாளாக உண்ணாவிரதம்
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் 2வது நாளாக உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 24, 2025 10:45 PM
சென்னை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னை, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில், நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்து இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை. இதை நிறைவேற்றுவதாக கூறி தான், முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதியை மறந்து விட்டார்.
இதை அவருக்கு நினைவூட்டவே, போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். கடந்த நான்கு ஆண்டில், 70க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
ஆனால், குழு அமைப்பது, கால நீட்டிப்பு செய்வது என, முதல்வர் தேர்தல் வாக்குறுதியை புறக்கணித்து வருகிறார். ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்குவது அரசின் கடமை.
உண்ணாவிரதம் இருப்போரில், பெரும்பான்மையானோர் 50 வயது கடந்தவர்கள். அரசின் நலனிற்காக, பல ஆண்டுகள் உழைத்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை, முதல்வர் கையேந்த வைப்பது முறையல்ல.
இப்பிரச்னையில் முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அனைத்து சங்கங்களையும் கூட்டி, மாநிலம் தழுவிய அளவில், மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

