தெரு நாய்களை பாதுகாக்க திருச்சியில் மையம் துவக்கம்
தெரு நாய்களை பாதுகாக்க திருச்சியில் மையம் துவக்கம்
ADDED : ஆக 24, 2025 12:33 AM

திருச்சி:திருச்சி மாநகராட்சி மற்றும் புளூ கிராஸ் அமைப்பு சார்பில் தெருநாய்கள் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் மையம் துவங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜய் சந்திரன் கூறியதாவது:
திருச்சி, உறையூர், கோணக்கரை சாலையில், 7,500 சதுரடியில் ஒரே நேரத்தில், 25 நாய்களை வைத்து, சிகிச்சை அளிக்கும் வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் காயமடைந்தோ, நோய் வாய்ப்பட்டோ சுற்றித்திரியும் நாய்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.
ரேபிஸ் மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கான ஆம்புலன்ஸ் சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 98943 69069 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட நாய்கள் பற்றிய தகவலை தெரிவிக்கலாம்.
புளூ கிராஸ் அமைப்பினர் நாய்களை மீட்டு மையத்துக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பர். இந்த மையத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியின் தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில் மட்டும், 5,200க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடையும் மாடுகள் போன்ற பெரிய விலங்குகளுக்காக தனி மீட்பு மையத்தையும் மாநகராட்சி நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.