UPDATED : மே 30, 2025 01:59 AM
ADDED : மே 30, 2025 12:24 AM
சென்னை:
புறச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும், காலாவதியான மற்றும் பயன்படுத்தப்படாத
மருந்துகளை, பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை, மத்திய
மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக
அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர்
ராஜீவ் சிங் ரகுவன்ஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தரக்
குறைபாட்டுக்காக திரும்ப பெறப்பட்ட மருந்துகள், முறையாக பேக்கிங்
செய்யப்படாத மருந்துகள், பயன்படுத்தப்படாத மருந்துகள், காலாவதியான
மருந்துகள் என, தேவைப்படாமல் இருக்கும் மாத்திரை, மருந்துகளை, பாதுகாப்பான
முறையில் அகற்றுவது அவசியம்.
இல்லையெனில், அவை விதிகளுக்கு
புறம்பாக, மீண்டும் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. அவை கழிவாக குடிநீர்
ஆதாரங்கள், நிலப்பகுதிகள், வனப் பகுதிகளில் கொட்டப்பட்டால், அவை
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்க கூடும். குழந்தைகள்
அல்லது விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், இம்மருந்துகள் கிடைக்கும்போது,
தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இவற்றை விட பாதுகாப்பின்றி
அகற்றப்படும் மருந்துகளால், புறச்சூழல் பாதித்து உயிர் சங்கிலி தடைபடும்.
எனவே,
மருந்துகளை உரிய பாதுகாப்பு விதிகளுடன் அகற்ற வேண்டும். மாநில அரசுகள்,
மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், விற்பனையாளர்கள், மருத்துவ துறையினர்
உள்ளிட்டோர், அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்களை பின்பற்றி, தேவையற்ற
மருந்துகளை அகற்றி அழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.