தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.276 கோடி வெள்ள நிவாரணம்!
தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.276 கோடி வெள்ள நிவாரணம்!
UPDATED : ஏப் 28, 2024 10:14 AM
ADDED : ஏப் 28, 2024 12:05 AM

சென்னை:புயல் மற்றும் வெள்ள நிவாரண நிதியாக, தமிழகத்திற்கு மத்திய அரசு, 276 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. 38,000 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும், 276 கோடி தருவது கஞ்சத்தனம் என, தமிழக கட்சிகள் விமர்சித்துள்ளன.
கடந்த டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.
புயல் ஓய்ந்த உடனே கனமழை வெளுத்து வாங்கியதால், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதித்தன.
பதில் தரவில்லை
மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சேதங்களை சீரமைக்கவும், 37,907 கோடி ரூபாய் நிதி வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 450 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
இது, வழக்கமாக வர வேண்டிய நிதி; நாங்கள் கேட்ட தொகையை தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது. மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்கவில்லை.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இது பெரிய பிரச்னையாக உருவானது. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக, தி.மு.க., குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், சென்னை புயல் பாதிப்பிற்கு 285.54 கோடி; தென்மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு 397.13 கோடி என மொத்தம், 682.67 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் இருப்பு தொகை, 406.57 கோடியை கழித்து, மீதமுள்ள 276.10 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், 115.49 கோடி ரூபாய் புயலுக்கும், 160.61 கோடி ரூபாய் வெள்ளத்துக்கும் நிவாரணம் என்று தெரிவித்தது.
குறைவான தொகை
கர்நாடகாவுக்கு, 3,498.82 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு மிகவும் குறைந்த தொகை ஒதுக்கி கஞ்சத்தனம் காட்டுவதாக, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழகம் கோரியது, 37,907 கோடி ரூபாய். உடனடி நிவாரணமாகவும், உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் தமிழக அரசு, 2,477 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசு அறிவித்திருப்பது வெறும் 276 கோடி. இதுவும், நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய பின்னரே வந்துள்ளது. தமிழகத்திற்கு நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என, வஞ்சிக்கும் பா.ஜ., அரசின் செயலை, மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படி தான் நடந்தது. மத்திய அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது கூட, தி.மு.க., அரசு கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.
தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரணம் என, இரண்டு வகை உண்டு. முதலாவதில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தருவர். அடுத்ததில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவர்.
அதற்கு சில வரைமுறைகள் வைத்துள்ளனர். மாநில அரசு கேட்ட நிதியை எந்த மத்திய அரசும் இதுவரை வழங்கியதில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இது, பா.ஜ., அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல இருக்கிறது.

