விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: மக்காச்சோளத்திற்கான செஸ் வரி ரத்து!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: மக்காச்சோளத்திற்கான செஸ் வரி ரத்து!
UPDATED : மார் 07, 2025 04:13 AM
ADDED : மார் 07, 2025 04:11 AM

சென்னை: மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்து, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசு வழங்கியுள்ளது.
வேளாண் துறையின் கீழ் வேளாண் வணிகப் பிரிவு இயங்கி வருகிறது. இதன் வாயிலாக, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு, 1 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, மக்காச்சோளத்திற்கு சமீபத்தில் 1 சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டது.
மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், செஸ் வரி விதிப்பின் பாதிப்பு விவசாயிகளை சென்று சேரும். வியாபாரிகள், இடைத்தரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசின் நடவடிக்கையால், மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கோழி தீவனம், சத்து மாவு, எத்தனால் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் சங்கங்கள் மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் உதயசந்திரன், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோருடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்வதால், அரசின் வருவாயில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்படாது என, உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, செஸ் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது. இது மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்து உள்ளது. சாகுபடி பரப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில், 9.88 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, 29 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் பெரும்பாலும் தீவன தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்துவதால், தேவை அதிகரித்துள்ளது.
![]() |
பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததை அடுத்து, மக்காச்சோள விற்பனையை முறைப்படுத்துவதற்காக, பெரம்பலுார், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலுார், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களிலும், ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து, மக்காச்சோளத்திற்கான ஒரு சதவீத செஸ் வரி விதிப்பு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, அரசிதழில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மனமார்ந்த நன்றி!
கோவை: மக்காச்சோளம் மீதான ஒரு சதவீதம் செஸ் வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு, விவசாயிகள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் அளித்த பேட்டி வருமாறு:
![]() |
அய்யாசாமி, செயலாளர், ஒருங்கிணைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சேலம்:உண்மையிலேயே விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம். செஸ் நீக்கத்தால் விவசாயிகளுக்கு சற்று கூடுதல் விலை கிடைக்கும். குறிப்பாக மானாவாரி மக்காச்சோள விவசாயிகளுக்கு, தங்களுக்கான விலையில் கை வைக்க மாட்டார்கள் என்பது நிம்மதியை அளித்திருக்கும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்ட அரசுக்கு நன்றி.
குப்புசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், குடிமங்கலம், திருப்பூர்: ஒரு சதவீத சந்தை வரி விதிப்பு என்பது 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எங்களின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ரத்து செய்த முதல்வருக்கு நன்றி.
மணிகண்டன், தலைவர், மானாவாரி விவசாயிகள் சங்கம், சிறுபாக்கம், கடலூர்:மக்காச்சோளத்தை மட்டுமே நம்பி பயிர் செய்யக்கூடிய மானவாரி விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம். செஸ் வரியால், விலை குறையாது என்பது நம்பிக்கையை அளிக்கிறது. வரியை நீக்கிய தமிழக அரசுக்கு நன்றி.