10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : மே 24, 2024 02:04 PM

சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தீவிர புயலாக
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று( மே 23) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று( மே 24) காலை 5 : 30 அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக நாளை இரவு வலுப்பெற்று நாளை மறுநாள் நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை கடக்க கூடும்.
ஒரிரு இடங்களில்
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை , விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 -29 செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.