தமிழகத்தின் சில இடங்களில் 20ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் சில இடங்களில் 20ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
ADDED : ஏப் 15, 2025 05:31 AM

சென்னை: 'தமிழகத்தில் இன்று முதல் 20ம் தேதி வரை, ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தென்மாநில கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், நேற்று காலை 8:00 மணியுடன் முடிவு அடைந்த 24 மணி நேரத்தில் மழை பெய்து உள்ளது.
கீழடுக்கு சுழற்சி
அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை பகுதியில் தலா 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. அதற்கு அடுத்தபடியாக, திருச்சி மாவட்டம் துறையூர், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் தலா 4 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு பகுதியில் 3 செ.மீ., மழை பெய்து உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது.
இதனால், இன்று முதல் 20ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இன்று முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
100 டிகிரி பாரன்ஹீட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 - 38 டிகிரி செல்ஷியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை, 28 டிகிரி செல்ஷியசை ஒட்டியும் பதிவாகும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு, திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நேற்று வெயில், 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.