அறிக்கையை மாற்றுவது நெறிமுறைகளை மீறும் செயல் தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
அறிக்கையை மாற்றுவது நெறிமுறைகளை மீறும் செயல் தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
ADDED : ஜூலை 17, 2025 09:58 PM
சென்னை:“கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றுவது, அகழாய்வு நெறிமுறைகளை மீறும் செயலாகி விடும்,” என, மத்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் பிரிவு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
மத்திய தொல்லியல் துறையின், தென்மண்டல அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, 2014 - -16 காலகட்டத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடியில், 102 அகழாய்வு குழிகளை தோண்டி, இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டார்.
அதில், சங்ககால செங்கல் கட்டுமானங்கள், நெசவுத்தொழில், சாயத்தொழில், மண்பாண்ட தொழில், விவசாயம் உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்தன.
அதன்பின், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தன் அகழாய்வு அறிக்கையை, 2023ல் சமர்ப்பித்தார்.
அதில், கீழடியில், பொ.ஆ.மு., 8 முதல் பொ.ஆ., 3ம் நுாற்றாண்டு வரையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை இணைத்தார். அதை ஏற்காத மத்திய தொல்லியல் துறை, அகழாய்வு அறிக்கையை திருத்தும்படி வலியுறுத்தியது.
இதையே, மத்திய கலாசார துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தும் கூறியதால், தமிழகத்தில் அரசியல் ரீதியாக சர்ச்சையானது.
இந்நிலையில், தன் அகழாய்வு அறிக்கை குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியதாவது:
கீழடியில் நான் நடத்திய அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், காலக்கணிப்பு சான்றுகள், மண்ணடுக்குகளின் அடிப்படையில் தான், அகழாய்வு அறிக்கை சமர்ப்பித்து உள்ளேன்.
அதை திருத்துவது, அகழாய்வு நெறிமுறைகளை மீறும் செயலாகவும், தொல்லியல் துறைக்கு செய்யும் அநீதியாகவும் அமைந்து விடும்.
அதேசமயம், படங்கள், எழுத்துகள், தரவுகள் உள்ளிட்டவற்றில் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால், திருத்தி தருவதில் தவறில்லை.
என் அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின், எழும் விமர்சனங்கள், விவாதங்களுக்கு பதில் அளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.