மேல்மலையனுாரில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு
மேல்மலையனுாரில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு
ADDED : மார் 15, 2024 01:34 AM

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக் கொள்ளையும், 12ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தங்க கவசத்தில் அருள்பாலித்தார். மாலை 3:30 மணிக்கு புதிதாக செய்து, அலங்கரிக்கப்பட்ட மேற்கு வாசலில் இருந்து வடக்கு வாசலுக்கு கொண்டு வந்தனர். மாலை 4:00 மணிக்கு அங்காளம்மனை தேரில் எழுந்தருளச் செய்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நாணயங்களை வாரி இறைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

