குற்ற பத்திரிகைகளை ஒன்றாக சேர்க்கக்கோரி தாக்கல் செய்த சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி
குற்ற பத்திரிகைகளை ஒன்றாக சேர்க்கக்கோரி தாக்கல் செய்த சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி
ADDED : நவ 16, 2025 01:39 AM
தனக்கு எதிரான அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக சேர்க்கக்கோரி, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் போலீஸ் பற்றி அவதுாறாக பேசியதாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக, 15க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 'தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், சங்கர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 'சங்கரை விசாரிக்க தடை இல்லை' என, கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 'தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிகைகளையு ம் ஒன்றாக இணைக்க வேண்டும்' என, சங்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அரதே அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.
'மேலும் ஒரு பேட்டிக்காக, 15 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன' என்று, வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என, நாங்கள் எப்போதும் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தோம். இந்த நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தாதீர்கள்' என்றனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சவுக்கு சங்கருக்கு எதிரான அனைத்து வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளும், ஒரே நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன' என்றனர்.
அதை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் ஒரே நீதிமன்றத்தில், வெவ்வேறு வழக்குகளில் தனித் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் எந்தவித தவறும் இல்லை.
'எனவே அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்' எனக்கூறி சங்கரின் மனுவை தள்ளுபடி செய்தனர்
- டில்லி சிறப்பு நிருபர் -.

