ரூ.5க்கு விலை குறைந்த சவ்சவ்: கொடியிலே தொங்கும் அவலம்
ரூ.5க்கு விலை குறைந்த சவ்சவ்: கொடியிலே தொங்கும் அவலம்
ADDED : ஜன 23, 2025 04:16 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் விளையும் சவ்சவ் காய்கள் விலை குறைந்து ரூ.5க்கு விற்பனையாவதால் அதன் விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே கொடியிலே தொங்க விட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
திண்டுக்கல்லிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்கு இயற்கை குணம் நிறைந்த மூலிகை செடிகள், வாழைப்பழங்கள், தேன் உள்ளிட்ட ஏராளமான இயற்கையான பொருட்கள் உற்பத்தியாகிறது. அந்த வகையில் சவ்சவ் காய்களும் இங்கு 100 ஏக்கருக்கு மேல் 200க்கு அதிகமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் சவ்சவ் காய்கறிகள் திண்டுக்கல், மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பபடுகிறது. தற்போது சீசன் துவங்க உள்ள நிலையில் 1 மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.12க்கு விற்பனையான சவ்சவ் காய்கள் தற்போது அடிமட்ட விலையான ரூ.5க்கு குறைந்துள்ளது.
இந்த விலை குறைவை எதிர்பார்க்காத விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் விவசாயக்கூலி, காய்களை பறிக்கும் ஆட்களுக்கு சம்பளம், வண்டியில் ஏற்றுவதற்கு கூலி, மார்க்கெட்டில் இறக்குவதற்கு கூலி, வண்டி வாடகை, மூடைகளை மார்க்கெட்டிற்குள் அனுமதிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையான செலவுகளை செய்து காய்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு சேர்த்தபோதிலும் எந்த வகையான லாபமும் இல்லாமல் செலவு மட்டுமே செய்யும் நிலை உள்ளது. இதனால் வெரும் நஷ்டம் மட்டுமே கிடைக்கிறது.
இந்தநிலையை சமாளிக்க முடியாத விவசாயிகள் அறுவடைக்கு தயாரான சவ்சவ் காய்களை பறிக்காமல் அப்படியே கொடியிலேயே தொங்க விட்டுள்ளனர். இதனால் பறவைகள் அவைகளை கொத்தி சேதப்படுத்துகின்றன. தொடரும் இப்பிரச்னையால் கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் செய்வதறியாது திகைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறுமலை விவசாயி விக்னேஷ் தியாகராஜன் கூறியதாவது; சவ்சவ் காய்கறிகள் நல்ல விலைக்கு போகும் என்ற நம்பிக்கையில் அதிகளவில் இந்த ஆண்டு பயிரிட்டோம். காய்களும் நல்ல முறையில் காய்த்துள்ளது. இருந்தபோதிலும் விலை குறைந்ததால் அதை சமாளிக்க முடியவில்லை. அந்தை நஷ்டத்தை ஈடுகட்ட முடியவில்லை. பல பகுதிகளில் அறுவடைக்கு தயாரான காய்கள் கொடியிலேயே காய்த்து தொங்குகிறது. அரசு எங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உரங்களும் மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.

