ADDED : மார் 25, 2025 05:50 AM

சென்னை; சென்னையில், சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல், வீடு முழுதும் கழிவுநீரையும், மலத்தையும் கொட்டி அசிங்கப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில், 'சவுக்கு மீடியா' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மற்றும் 68 வயதான அவரின் தாய் கமலாவும், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில், துாய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து வந்த கும்பல், அவரது வீட்டுக்குள் நுழைந்து, சங்கரின் தாய் கண்முன், வீட்டில் இருந்த பொருட்களை சூறைாடினர்.
'டைனிங் டேபிள்', படுக்கை அறை என, எல்லா இடங்களிலும், மலத்தை வீசியுள்ளனர்.
இதுகுறித்து, சங்கர் கூறியதாவது:
நான் நேற்று காலை, 9:45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, காரில் வெளியே சென்றேன். வீட்டில் என் தாய் மட்டும் தனியாக இருந்தார். என் மீது ஏற்கனவே பதிவான வழக்கு தொடர்பாக, சென்னை மதுரவாயலில், என் தாயார் பெயரில் உள்ள வீடு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த வீட்டிற்கு நான்கு மாதங்களுக்கு முன் தான் வாடகைக்கு வந்தோம். இந்த வீட்டு முகவரியை நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. நேற்று காலை, என் காரை கடந்து இரண்டு மினி பஸ்கள் சென்றன.
அதில் இருந்தோர். என் மீது கற்களை வீசினர். இதனால், சந்தேகம் ஏற்பட்டு, என் தாயை தொடர்பு கொண்டு, 'வீட்டை பூட்டிக் கொள்ளுங்கள்; யார் தட்டினாலும் திறக்க வேண்டாம்' என கூறினேன்.
அப்போது என் தாய், பதற்றமாக, 'வீட்டின் கதவை பலமாக தட்டுகின்றனர்' என்றார். அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று சூறையாடினர்.
என் தாயிடம் இருந்த மொபைல் போனை பறித்து, எனக்கு வீடியோ அழைப்பில் வந்து, சொல்லவே கூசும் அளவுக்கான வார்த்தைகளால் என்னை திட்டினர். துாய்மை பணியாளர்கள் போல உடை அணிந்து இருந்தனர்.
'வீடு முழுதும் சூறையாடும் காட்சியை பாருடா' என, சொல்லி சிரித்தனர். பக்கெட்டில் எடுத்து வந்த சாக்கடையை கொட்டினர். சாப்பிடும் மேஜை, படுக்கை அறை என, எல்லா இடங்களிலும் மலத்தை கரைத்துச் கொட்டினர்.
உடனடியாக தொடர்பை துண்டித்து, அவசர போலீஸ் எண்:100க்கு தொடர்பு கொண்டேன். போலீசார் ஒரு மணி நேரம் கழித்து தான் வீட்டுக்கு சென்றனர்.
ஆனால், 'மர்ம நபர்கள் வெளியேறும் வரை, நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம்' என, என்னிடம் கூறி விட்டனர். இதனால், 11:45 மணியளவில் வீட்டிற்கு சென்றேன்.
வந்தவர்கள் என் தாய்க்கும், எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வீட்டிற்கு உள்ளேயே கால் எடுத்து வைக்க முடியவில்லை. அந்தளவுக்கு வீட்டை நாசப்படுத்தி உள்ளனர். வந்த ஆண்கள், பெண்கள் என, எல்லாரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.