சென்னை புத்தக கண்காட்சி நிறைவு! ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு! ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
ADDED : ஜன 12, 2025 10:21 PM

சென்னை; சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு பெற்றுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. கண்காட்சியை டிசம்பர் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் பல்வேறு பதிப்பக நிறுவனங்களில் சார்பில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.
புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் வழக்கமான பாணியில் அரசியல் பேசியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான புத்தக பதிப்பாளர் சங்கத்தினர், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சீமான் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு சில நாட்கள் இணையத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.