சென்னை - விசாகப்பட்டினம் சுற்றுலா கப்பல் இயக்க திட்டம்
சென்னை - விசாகப்பட்டினம் சுற்றுலா கப்பல் இயக்க திட்டம்
ADDED : செப் 17, 2025 01:02 AM
சென்னை:புதுச்சேரி - நாகப்பட்டினம், துாத்துக்குடி - கொச்சி, சென்னை - விசாகப்பட்டினம் உட்பட, நாடு முழுதும், 10 இடங்களுக்கு சுற்றுலா கப்பல்கள் இயக்க, மத்திய கப்பல் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டில், கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த, 'குரூஸ் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கப்பல், துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
'குரூஸ் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்கவும், 5,000 கி.மீ.,க்கும் அதிகமாக, கப்பல் பயண வழித் தடங்களை உருவாக்குவதையும் நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறோம்.
கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா சொகுசு கப்பல்கள், இந்தியாவின் பல்வேறு துறைமுக நகரங்களுக்கு வர உள்ளன. இதற்கான பேச்சு நடந்து வருகிறது.
புதுச்சேரி - நாகப்பட்டினம், துாத்துக்குடி - கேரளா மாநிலம் கொச்சி, சென்னை - ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் மும்பை, மங்களூரு உட்பட, 10 நகரங்களுக்கு சொகுசு கப்பல்கள் இயக்க உள்ளோம். இதற்காக, கப்பல் நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
அந்த வகையில், சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் முனையம், தற்போது, 1,500 பயணியரை கையாளும் வகையில் உள்ளது. இதை, 3,000 பேரை கையாளும் வகையில், 19.25 கோடி ரூபாயில் மேம்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.