'சமூக வளர்ச்சியின் அடையாளம்' வாசிப்பு குறித்து முதல்வர் கருத்து
'சமூக வளர்ச்சியின் அடையாளம்' வாசிப்பு குறித்து முதல்வர் கருத்து
ADDED : ஜன 04, 2024 01:28 AM

சென்னை:சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், சென்னை 47வது புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்து, கலைஞர் பொற்கிழி விருதுகளையும், 'பபாசி' விருதுகளையும் வழங்கினார்.
அவர் பேசியதாவது:
இந்த விழாவில், முதல்வர் பங்கேற்பதாக இருந்தது. அவருக்கு தவிர்க்க முடியாத பணிகள் இருந்ததால், அவர் தன் வாழ்த்துக் கடிதத்தை என்னிடம் தந்து இதை துவக்கி வைக்கும்படி கூறினார்.
நான் ஏற்கனவே, அமைச்சர் சுப்பிரமணியனின் நுால் உட்பட பல நுால்களை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்போது, 'முத்தமிழறிஞர்' என்ற பதிப்பகத்தின் பதிப்பாளராகவும் ஆகியுள்ளேன்.
இந்நிலையில் புத்தகக் காட்சியை துவக்கி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், முதல்வரின் கடிதத்தை அமைச்சர் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த புத்தக காட்சி சில ஆண்டுகளில் பொன்விழா காண உள்ளது. இது தமிழ்ச் சமூகம் வாசிப்பால் முன்னோக்கிச் செல்வதன் அடையாளம். புத்தகம் எழுதுவது, வெளியிடுவது எல்லாம் தொழில் அல்ல; அறிவுத் தொண்டு.
படைப்பாளர்களின் தோழராக இருந்த கருணாநிதியின் நுாற்றாண்டில், சிவசுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, தமிழ்மகன், அழகியபெரியவன், வேலுசரவணன், மயிலை பாலு ஆகியோர், கலைஞர் பொற்கிழி விருதுகள் பெற்றுள்ளனர்; அவர்களுக்கு வாழ்த்துகள்.
வாசிப்பு தனிமனிதனின் அடையாளம் அல்ல; ஒரு சமூகம், மாநிலம், நாடு வளர்தலின் அடையாளம். தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தமிழில் உலக இலக்கியங்களை வழங்கும் வகையில், வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தகக்காட்சி நடக்க உள்ளது. அதில் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பாலமாக முகவர்கள் நியமிக்கப்படுவர்.நான் புத்தகங்களை பரிசளிக்கும் திட்டத்தை, ஒரு இயக்கமாக துவக்கி உள்ளேன்.
எனக்கு பரிசாக வரும் நுால்களை, கிராமப்புற நுாலகங்களுக்கு வழங்குகிறேன்.
தமிழுக்காக பலர் திருச்சியில் இருந்து சென்னைக்கு தமிழ்ப்படையாக வந்தனர்; பலர் தீக்குளித்தனர். அதுபோன்ற நடவடிக்கையை, இப்போது எதிர்பார்க்கவில்லை.
அதற்குப் பதிலாக, தமிழார்வத்தைதான் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.