புயல் நிவாரணம் ரூ.5,000 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புயல் நிவாரணம் ரூ.5,000 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : டிச 03, 2024 06:08 AM

புதுச்சேரி: ''பெஞ்சல் புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இதுவரை கண்டிராத அளவில் 48.4 செ.மீ., மழை பெய்துள்ளது. 208 முகாம்களில் 551 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மீட்பு பணியில் 4000 அரசு ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழு, ராணுவத்தினர் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் 4 பேர் இறந்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். நிவாரண பணியில் அரசு துறைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன.
ரூ.5,000 நிவாரணம்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணம் அளிக்கப்படும்.
மழையால் 10 ஆயிரம் எக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணமாக எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். மழையில் இறந்த 4 மாடுகளுக்கு தலா ரூ.40 ஆயிரம், 16 கன்றுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். பழுதடைந்த 50 படகுகளை சீரமைக்க தால ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட 15 குடிசைகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம், சிறிய பாதிப்பு ஏற்பட்ட 10 வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
சாத்தனுார் அணை நீர்திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பாகூர் பகுதியும், வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி கரையோரம் உள்ள 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் 90 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
மத்திய அரசிடம் நிவாரணமா ரூ. 100 கோடி கேட்போம்
புயல் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை தர அழைப்பு விடுக்கப்படும். சாலை, மேம்பாலம் சேதங்களுக்கு முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் வழங்க தலைமை செயலர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். ஒரு வாரத்திற்குள் முழு சேதம் கணக்கிட்டு நிவாரண நிதி கோரப்படும்.
புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்பி விட்டது. மழை நிவாரணத்திற்கு மட்டும் ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவித்த நிவாரண தொகை விரைவில் வழங்கப்படும்.
மழையால் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி மத்திய சமையல் கூடத்தில் இருந்து ஒட்டுமொத்தாக உணவு தயாரித்து அனுப்ப முடியாது என்பதால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் அந்தந்த பகுதியில் உணவு தயாரித்து பொதுமக்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கான செலவை அரசிடம் வாங்கி கொள்ள தெரிவித்து விட்டேன். அதன்படி எம்.எல்.ஏ.,க்கள் உணவு தயாரித்து வழங்குகின்றனர்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள், தங்களின் மனதை தொட்டு சொல்ல வேண்டும். இதற்கு முன்பு எத்தனை நாள் தண்ணீர் தேங்கி நின்றது? தற்போது எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.