கடினமாக உழைத்தாக வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
கடினமாக உழைத்தாக வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
ADDED : ஜூலை 14, 2025 01:55 AM
சென்னை: 'மக்கள் ஆதரவு பெருகப் பெருக, பொறுப்பும், கடமையும் கூடுகிறது; எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதை காப்பாற்ற, அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்' என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:
சென்னை அறிவாலயத்தில், கடந்த மாதம் 13ம் தேதி துவக்கப்பட்ட, 'உடன்பிறப்பே வா' கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி, இதுவரை 12 நாட்கள் நடந்துள்ளது. அதில் 1,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது முதல்வர், 'கட்சி நிர்வாகிகள் அனைவரும் மக்களை சந்திக்கும் போது, பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவு, நான் முதல்வன், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் பலன்களை எடுத்துரைக்க வேண்டும். எந்தவித சுணக்கமுமின்றி, விழிப்புடன் பணியாற்ற வேண்டும். மக்கள் ஆதரவு பெருகப் பெருக, பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது.
'அதை காப்பாற்ற, நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க, நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் தான் வளரும். இந்த வெற்றியை பெற்றுத்தர, நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்' என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.