அ.தி.மு.க.,வின் பச்சை துரோகம்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அ.தி.மு.க.,வின் பச்சை துரோகம்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : டிச 10, 2024 07:00 AM
சென்னை : 'மாநில உரிமையை பறித்து, மத்திய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை, அ.தி.மு.க., ஆதரிப்பது பச்சை துரோகம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை மக்களுக்கு, அ.தி.மு.க., செய்த துரோகத்துக்கு, பார்லிமென்ட் ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது.
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில், பார்லிமென்டில் அ.தி.மு.க., செய்த துரோகம், வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானது. உடனே, 'நான் மசோதாவை தான் ஆதரித்தேன். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை' என்று, தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.
அ.தி.மு.க., ஆதரவில் நிறைவேறிய சட்ட திருத்த மசோதா தான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை, மாநில அரசிடம் பிடுங்கி, மோடி அரசிடம் கொடுக்க காரணமானது. அந்த சட்ட மசோதாவை தி.மு.க., எதிர்த்தது; அ.தி.மு.க., ஆதரித்தது.
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை, மத்திய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்ற சட்ட திருத்தத்தை தான், தம்பிதுரை ஆதரித்தார்.
இதன் அடிப்படையில் தான், அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு முன் வரவில்லை. அ.தி. மு.க.,வின் தொடர் துரோகத்தின், புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டில்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்து விட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.
மாநில உரிமையை பறித்து, மத்திய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை, அ.தி.மு.க., ஆதரிப்பது பச்சை துரோகம் அல்லவா. இத்தனையும் செய்து விட்டு, இங்கே யாரை ஏமாற்ற நாடகம்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பர். பழனிசாமியின் புளுகு எட்டு நொடி கூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது, உண்மைகளை பேசி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.