கடலுாருக்கு புதிய திட்டங்கள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
கடலுாருக்கு புதிய திட்டங்கள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 16, 2025 12:16 AM
சென்னை:'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலுார் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, வெளியிட்ட அறிவிப்புகள்:
சிதம்பரம் நகரத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான்சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்பு சாலை, 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
வட மாவட்டங்களில் உள்ள, அனைத்து பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், கடலுார் தாலுகாவில் உள்ள, அரிசிபெரியான் குப்பத்தில், புதிய உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி துவக்கப்படும்
காட்டு மன்னார்கோவில் தாலுகாவில் இருந்து, புதிதாக பிரிக்கப்பட்டுள்ள, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவிற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும், சிறப்பு திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்
வீராணம் ஏரிப் பகுதியில், சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, சோழதரத்தில் இருந்து, ராஜமதகு வரை, படகு சவாரி மேற்கொள்ளவும், சுற்றுலா பயணியருக்கான வசதிகளை அமைத்திடவும், 10 கோடி ரூபாய் செலவில், ஏரியை துார் வாரும் பணி மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்
எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் கோரிக்கையை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில், புதிய திறன் மேம்பாட்டு நிலையமும், தொழிற்பேட்டையும் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

