காசா போர் நிறுத்தம் வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
காசா போர் நிறுத்தம் வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : அக் 09, 2025 01:41 AM

சென்னை: ''காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, சென்னை எழும்பூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:
காசா மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள், அனைவரின் மனதையும் உலுக்குகின்றன. பன்னாட்டு மனித உரிமை சட்டங்களையும், ஐ.நா., கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பு கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் தாக்குதல் அதிகமாகி கொண்டிருக்கிறது. இதுவரை, 50,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுருக்கமாக சொன்னால், ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டு விட்டது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூனில், பட்டினியால் வாடும் பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது, அவர்களில் 45 பேரை, இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது.
உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறிக்கும் கொடூரத்தை பார்த்து, அனைவரின் இதயமும் நொறுங்கி போயிருக்கிறது. காசாவில் மரண விளிம்பில் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்காக, உணவுப் பொருள், மருந்துகள், குழந்தைகளுக்கு பால் பவுடர் என கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை தடுத்து கைது செய்திருக்கிறது, இஸ்ரேல் அரசு.
மக்களின் உணர்வு இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
வரும் 14ம் தேதி, தமிழக சட்டசபை கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனே போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்கக் கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும்.
சட்டசபையில் கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானம், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பர் என, நம்புகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.