'பிரதமரை முடிவு செய்யும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின்': விருத்தாசலத்தில் அமைச்சர் வேலு பேச்சு
'பிரதமரை முடிவு செய்யும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின்': விருத்தாசலத்தில் அமைச்சர் வேலு பேச்சு
ADDED : மார் 04, 2024 06:06 AM
விருத்தாசலம் : கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது;
தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. துாத்துக்குடியில் நடந்த அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தடையாக இருப்பதாக பேசினார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு தடையாக இருந்தது இல்லை.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, மாநில அரசு 70 சதவீதம் மானியம் வழங்குகிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 643 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு 22 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மேடைதோறும் தமிழின் பெருமை குறித்து பேசும் பிரதமர் மோடி, தமிழை அரசு மொழியாக அறிவிக்க வேண்டும். இண்டியா கூட்டணியில் பிரதமரை முடிவு செய்யும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

