'வடசென்னை - 3' அனல்மின் நிலையம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
'வடசென்னை - 3' அனல்மின் நிலையம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ADDED : மார் 07, 2024 11:43 AM
சென்னை:திருவள்ளூர் அத்திப்பட்டில் மின்வாரியம் அமைத்துள்ள 'வடசென்னை - 3' அனல்மின் நிலையத்தில், மின் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதனால், தமிழகத்திற்கு கூடுதலாக, 800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகாவாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சோதனை
அதன் அருகே தலா, 600 மெகாவாட் திறனில் இரு அலகுகள் உடைய, வடசென்னை விரிவாக்க அனல்மின் நிலையம் உள்ளது.
இரண்டுக்கும் அருகில், 190 ஏக்கரில், வடசென்னை - 3 என்ற பெயரில், 800 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்க, 2010ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன் கட்டுமான பணி, 2016ல் துவங்கியது; திட்ட செலவு, 10,158 கோடி ரூபாய்.
அங்கு, 2019 - 20ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இரு ஒப்பந்த நிறுவனங்கள், கட்டுமான பணிகளை மிகவும் மந்தகதியில் மேற்கொண்டன.
இதனால், திட்டமிட்ட காலத்திற்குள் மின் உற்பத்தி துவங்கப்படவில்லை. மின்வாரிய உயரதிகாரிகள் தொடர்ந்து வடசென்னை - 3 மின் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்து முடுக்கிவிட்டபடி இருந்தனர்.
ஒரு வழியாக, இந்தாண்டு ஜன., 14ம் தேதி அதிகாலை, 1:39 மணிக்கு, வடசென்னை - 3 மின் நிலையத்தில், சோதனை மின் உற்பத்தி துவங்கியது.
பின், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொடர்ந்து, பல சோதனைகள் செய்யப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை, வடசென்னை - 3 மின் நிலையத்திற்கு சென்று, மின் உற்பத்தியை துவக்கி வைத்தார். இதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
வடசென்னை - 3 அனல்மின் நிலைய திட்டம், அதிக உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பம் பயன்படுத்தி நிறுவப்படும், தமிழகத்தின் முதல் அனல்மின் திட்டம்.
மற்ற அனல்மின் நிலையங்களை ஒப்பிடும்போது, இது, 5 சதவீதம் முதல், 6 சதவீதம் வரை அதிக திறன்மிக்கது.
இதன் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு எரிபொருள் செலவு குறைவதுடன், மின் உற்பத்தியை துவக்க குறைந்த நேரமே தேவைப்படும்.
ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி பயன்பாடு, 0.45 கிலோ கிராம் மட்டுமே தேவை என்பதால், 'கார்பன் டை ஆக்சைடு' வெளியேற்றம், 25 - 30 சதவீதம் குறைகிறது.
வடசென்னை - 3 மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அருகில் உள்ள, 765 கிலோ வோல்ட் மின் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படும்.
வெளிச்சந்தை
புதிய மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததால், மாநிலத்தின் மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரித்து, மின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்வதும் குறைக்கப்படும். இதனால், மின்வாரிய நிதிநிலை மேம்படும்.
மின் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, சேகர்பாபு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் உட்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

