UPDATED : ஆக 10, 2025 05:07 AM
ADDED : ஆக 10, 2025 04:05 AM

கோவை: முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
ஜூலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில், உடுமலை, பொள்ளாச்சி நிகழ்வுகளில் பங்கேற்க, அவர் இன்று கோவை வருகிறார்.
சென்னையில் இருந்து, இன்று மாலை, 5:25 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், மாலை, 6:50 மணிக்கு காரில் உடுமலை நரசிங்கபுரம் செல்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, உடுமலையில் இரவு தங்குகிறார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகாலிங்கம், பழனிசாமி ஆகியோரது சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம், பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கரில், 4 கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். பின், கோவை வந்து, விமானத்தில் சென்னை செல்கிறார்.முதல்வர் வருகையை முன்னிட்டு, கோவை மாநகரில், 500 போலீசார், மாவட்டத்தில், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகருக்குள் வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் வாகனங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

