வித்தையறிந்தவர்கள் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் உறுதி
வித்தையறிந்தவர்கள் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் உறுதி
ADDED : ஜூலை 30, 2025 04:48 AM

சென்னை: 'நம் விரல்களை கொண்டே, நம் கண்களை குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை, முறியடிக்கும் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீட்டை, 2021 ஜூலை 29ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதன்படி, அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில், 4,022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில், 1,000 இடங்களும் கிடைத்துள்ளன.
நான்கு ஆண்டுகளில் மொத்தமாக, 20,088 மருத்துவ இடங்களை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் பெற்று பயனடைந்து உள்ளனர்.
இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய மாணவர் சேர்க்கை வாயிலாக, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 20,088 இடங்கள் கிடைத்துள்ளன. இது, பல குடும்பங்களின் தலைமுறை கனவு.
'சதிக்கு கால் முளைத்து சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது, இதுதான் நம் தலையில் எழுதியது' என, சுருண்டு விடாமல் போராடி பெறும் உரிமைகளால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதி செய்கிறோம்.
சமூக நீதிக்கான இந்த அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் விரல்களை கொண்டே, நம் கண்களை குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

