கோவை 2வது மாஸ்டர் பிளான் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கோவை 2வது மாஸ்டர் பிளான் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 04, 2025 11:36 PM

கோவை; கோவை உள்ளூர் திட்ட பகுதியின் இரண்டாவது முழுமை திட்டத்தை (மாஸ்டர் பிளான்), முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கி, 1,531 சதுர கி.மீ., பரப்பளவில், புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில், இரண்டாவது முழுமை திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது துல்லியமான நகர திட்டமிடலை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குதாரர் ஆலோசனை அடிப்படையில், இது உருவாக்கப்பட்டு உள்ளது.
சமூக மற்றும் பொருளாதார உத்திகள் வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்துதல், வீட்டுவசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல், சுற்றச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டது.
'மாஸ்டர் பிளான்' வெளியீடு
இது திட்டங்களை நேர்த்தியாகவும், காலக்கெடுவிற்குள் செயல்படுத்த வழிவகுக்கும். கோவை உள்ளூர் திட்ட பகுதியின் இரண்டாவது முழுமை திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் முத்துசாமி, தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை உள்ளூர் திட்டக்குழும எல்லைக்கு உட்பட்ட மக்கள் தொகை தற்போதே, 25லட்சத்தை எட்டி விட்டது. இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.
அதே சமயம் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கோவைக்கான 'மாஸ்டர் பிளான்' கடைசியாக, 1994ல் வெளியிடப்பட்டது. நகர வளர்ச்சிக்கு ஏற்ப, 10 ஆண்டுக்கு ஒரு முறை 'மாஸ்டர் பிளான்' புதுப்பித்து வெளியிட வேண்டும்.
இதன்படி, 2004ல் வெளியிட்டிருக்க வேண்டும். 21 ஆண்டுகள் இழுபறிக்கு பின், 2041 மக்கள் தொகையை கணக்கிட்டு, அப்போதைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர ஊரமைப்பு துறையால் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.
கோவையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படும் மாஸ்டர் பிளான் நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுச்சூழல், பொருளாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட பல துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனையின் கீழ் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டமாகும். இதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
என்னென்ன சிறப்பு இருக்கு
l கோவை 'மாஸ்டர் பிளான்' எல்லை, 1,531.57 ச.கி.மீ., பரப்பளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
l கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலுார் ஆகிய நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களுக்கான திட்டங்கள் அடங்கியுள்ளன.
l உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்துதல், வீட்டு வசதி தேவையை நிறைவு செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
l 2041ல் 58.24 லட்சமாக மக்கள் தொகை உயரும் என்பதால், உத்தேச நிலப்பயன்பாட்டு கோட்பாடும், வலுவான நிலப்பயன்பாட்டு திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* முதன்மை குடியிருப்பு, கலப்பு குடியிருப்பு, வணிகப்பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை, கல்வித்துறை பயன்பாடு, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம், புன்செய் மற்றும் நன்செய் விவசாய நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
l முன்பு ஏற்படுத்திய திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் நிலப்பயன்பாட்டிலும், கட்டட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
l 2024ம் ஆண்டில், 77.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். தற்போது, 3,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் தங்கும் அறைகள் உள்ளன. 2041ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதற்கேற்ப, 12,112 ஓட்டல்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
l 2041ல் கோவை மக்கள் தொகை 58.24 லட்சமாக உயரும். மின் தேவை 1,528 மெகாவாட்டில் இருந்து, 6,262 மெகாவாட் ஆக உயரும். அதற்கேற்ப, துணை மின் நிலையங்களின் திறன் அதிகரிப்பதோடு, துணை மின் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
l கோவை மாநகராட்சி பகுதிகளில், 257.04 ச.கி.மீ., பரப்பளவில், அன்றாடம், 1,100 மெட்ரிக் டன் கழிவு அப்புறப்படுத்துகிறது. இதற்காக, வெள்ளலுாரில் உள்ள 654 ஏக்கரில், ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதி, 279.7 ஏக்கர் பயன்பாட்டில் உள்ளது; மீதமுள்ள பகுதியை விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.