அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனை முன் கூட்டியே எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனை முன் கூட்டியே எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஆக 17, 2025 02:53 AM
ADDED : ஆக 17, 2025 02:08 AM

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி உள்ளனர். இது எதிர்பார்த்ததுதான் என, அறிவாலய வட்டாரங்களில் சாதாரணமாக பேசுகின்றனர்.
அறிவாலய வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியை விட்டுச் சென்ற அ.தி.மு.க., தேர்தலில் தோல்வி அடைந்ததும், மீண்டும் கடந்த ஏப்.,லில் பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. தமிழகத்துக்கு அமித் ஷா வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வரவழைத்து, மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்தார்.
அதற்கு முன்பே, தி.மு.க., தொடர்புடையோர் மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் மீது மத்திய பா.ஜ., அரசு கண் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி, பொன்முடி குடும்பத்தினர், அமைச்சர் துரை முருகன் குடும்பத்தினர், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரை குறி வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வழக்குகளும் போடப்பட்டன.
இது அரசியல் பின்புலத்தோடு போடப்பட்ட வழக்குகள் என, தி.மு.க., தரப்பும் கடும் விமர்சனங்களை வைத்தது. இதன் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தலைமையின் ஆசி உண்டு என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகும் கூட, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. அந்த கூட்டணியை நோக்கி, சிறு கட்சிகள் கூட வரவில்லை. இதனால், இரு தரப்பும் கடும் அப்செட்டில் உள்ளன.
இந்த சூழ்நிலையில், தி.மு.க.,வை நோக்கி அமலாக்கத்துறையை கட்டாயம் பா.ஜ., தலைமை ஏவி விடும் என, தி.மு.க., தரப்பு எதிர்பார்த்தது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்த்தார். அவருக்கு கிடைத்த ரகசிய தகவல்களும் அதையே உறுதி செய்தன.
எனவே, 'மிக விரைவில், அமலாக்கத்துறை அதிகாரிகள், தி.மு.க., அமைச்சர்களை நோக்கி சோதனைக்காக வருவர்' என, சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிக்னல் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், 'அதை அனைவரும் துணிச்சலோடு, கவனமாக அதை எதிர்கொள்ள வேண்டும்' எனவும் சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, 'என்னதான் தி.மு.க., மற்றும் தமிழக அரசு செயல்பாடுகள் மீது எதிர்கட்சியினர் குறைகளை கூறினாலும், தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கையாக உள்ளனர். தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும், மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கலாம்; அதை, அமைச்சர்கள் அறிந்து சரி செய்ய வேண்டும்.
ஆக., கடைசியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு செல்லவிருக்கிறேன். இருபது நாட்களுக்கு பயணத் திட்டம் தயாராகி இருக்கிறது. நான், தமிழகத்தில் இல்லாத சூழலில் கூட, அமைச்சர்களை நோக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பப்படலாம்.
இப்படியெல்லாம் செய்வதன் வாயிலாக, சட்டசபைத் தேர்தலை தி.மு.க., வலுவுடன் எதிர்கொள்வதில் தொய்வு ஏற்படும் என பா.ஜ., கருதும்; பின்னணியில் அ.தி.மு.க.,வும் இருக்கும். அரசியலில் இதெல்லாம் நடப்பதுதான்' என்றும் அமைச்சர்களிடம் சொல்லி, அனைவரையும் கவனமாக இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.
அமைச்சரவை கூட்டத்துக்கு முன், தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. அப்போதும், முதல்வர் இதே கருத்தை வெளிப்படுத்தி, மா.செ.,க்களாக இருப்போரையும் கவனமாக இருக்கக் கேட்டுக் கொண்டார். அதனால், தமிழக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனையை, முதல்வர் ஸ்டாலின் வாயிலாக, கட்சியின் முக்கியத் தலைவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-